அதிமுக ஜூலை 11ல் பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பி.எஸ். அணியினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரும் நேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தொடுத்தது. அதை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ரத்து செய்யக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு மார்ச் 22ஆம் தேதி விசாரித்து, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
அந்த மனுவிற்கு இன்று விசாரணை முடிவில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பன்னீர்செல்வம் அணியினரின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். நீதிபதி
தொடர்புடைய செய்தி: அதிமுக பொதுச்செயலாளரானார் இபிஎஸ்! இன்றைய வழக்கின் பின்னணி மற்றும் வாதங்கள் என்ன?
மேலும் பிரதான உரிமையியல் வழக்குகளில் அதிமுக பொது செயலாளர் எட்பபாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது ஒ.பி.எஸ். தரப்பு. இதற்காக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வை நாடியது.
அந்த அமர்வில் ஒ.பி.எஸ். அணியினர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி “தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய உள்ளோம். அந்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும்” என்கிற கோரிக்கையை வைத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக அனுமதி அளித்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பின் இந்த முடிவு குறித்து இபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியவற்றை இங்கே வீடியோ வடிவில் காண்க:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM