புதுடில்லி, ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நம் நாட்டில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 18 என்றும் நிர்ணயித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இது பாரபட்சமான முடிவு என்றும், இருவருக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷாஹிதா குரேஷி என்பவர், ஆண்களுக்கு இணையாக பெண்களின் வயதையும் 21 ஆக உயர்த்த உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இது சட்டத்துக்கு உட்பட்ட விவகாரம். இந்த விதியை ரத்து செய்தால் பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்ற சூழல் இல்லாமல் போக வாய்ப்புள்ளது,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பது குறித்து தனித்தனி சட்டங்கள் உள்ளன. இது குறித்து இங்கு விவாதிக்க முடியாது.
திருமண வயதை மாற்ற வலியுறுத்தி அஷ்வினி உபாத்யாய் என்பவர் தொடர்ந்த வழக்கில், இதே கருத்தின் அடிப்படையில் கடந்த 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement