காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, தாய்லாந்து நாட்டில் சிலோம் என்ற பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் 24 பெண்கள், 5 ஆண்கள் உட்பட மொத்தம் 29 பேர் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் வந்திருந்தனர். இவர்கள், கோயிலில் நீண்டநேரம் தியானம் செய்தும், பக்தி பாடல்கள் பாடியும் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர், சிவனடியார்களை தாய்லாந்திலிருந்து அழைத்து வந்த, தலைமை நிர்வாகியான காட்டி கூறுகையில், ‘தாய்லாந்தில் சிலோம் என்ற பகுதியில் சிவன் கோயிலும், மகா காளியம்மன் கோயிலையும் நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி விழாக்களையும் சிறப்பாக கொண்டாடுகிறோம்.
ஆண்டுக்கு 3 முறை இந்தியா வந்து, தமிழகத்தில் உள்ள சிவனுக்கே உரிய பஞ்ச பூத ஸ்தலங்களை பார்த்து தரிசித்து விட்டு தாய்லாந்து திரும்புவோம். அந்த வகையில் சிதம்பரம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசிக்க வந்தோம். இக்கோயில் கட்டிடக்கலை அற்புதமாக அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்தல விருட்சமான மாமரத்தின் அற்புதங்கள் வியப்பாக இருக்கிறது. இதனையடுத்து, ஆந்திர மாநிலம் காளஹஸ்திரி சிவன் கோயிலுக்கு செல்ல இருக்கிறோம். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, உடையலங்காரம் ஆகியவை எங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால், தாய்லாந்து நாட்டிலும் நாங்கள் அதையே பின்பற்றுகிறோம்’ என்றார்.