கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஐயர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பக்தர்களாக உள்ளனர். இந்தக் கோயிலில் வருடாவருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பங்குனி மாதத் திருவிழாவினை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம், 12-ம் தேதி கம்பம் ஊன்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்தக் கம்பத்திற்குப் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். அதேபோல், நேற்று குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து வந்து, ஸ்ரீ மகா மாரியம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்தனர்.
அதன் பிறகு இரவு தீமிதித் திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சியில், ஐயர் மலையைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தீமிதித் திருவிழாவினைக் கண்டுகளித்தும், சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.