ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் தொடர்பாக திருமண ஆல்பத்தை வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாடாக உழைத்தும் உரிய சம்பளம் கொடுக்காததால் திருடினேன் என்று பணிப்பெண் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு
நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று காவல் துறையிடம் கடந்த 10ம் திகதி புகார் அளித்ததுடன், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி, ஈஸ்வரியின் கணவர் உமாபதி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கரில் இருந்து நகைகளை திருடி உள்ளார் என்பது தெரியவந்தது.
அத்துடன் திருடிய நகைகளை நகைக் கடைகளில் விற்பனை செய்து, அந்தப் பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் பணிப்பெண் ஈஸ்வரி வீடு வாங்கியதும் விசாரணையில் அம்பலமானது.
திருமண ஆல்பத்தை வைத்து விசாரணை
வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று கூறினாரே தவிர, அதில் வைரத்தின் மதிப்பு என்ன? எத்தனை கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது என்பது குறித்து ஐஸ்வர்யா கூறவில்லை.
ஆனால் பொலிஸார் பணிப்பெண் ஈஸ்வரியின் வீட்டை சோதனையிட்ட போது 100 சவரன் நகை, 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி என மொத்தம் 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் எந்தெந்த நகைகள் திருடப்பட்டது என்று ஐஸ்வர்யாவால் தெளிவாக கூற முடியவில்லை, காரணம் அவர் அந்த நகைகளை இறுதியாக தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது அணிந்துவிட்டு லாக்கரில் வைத்ததாகவும், அதன் பின் அந்த நகைகளை எடுத்து பார்க்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக திருட்டு போன நகைகளின் ரசீதை வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவார்கள், ஆனால் எந்தெந்த நகைகள் திருட்டு போனது என்ற திட்டம் ஐஸ்வர்யாவிடம் இல்லாததால், தங்கையின் சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தை வைத்து அதில் ஐஸ்வர்யா அணிந்து இருந்த நகைகளை ஒப்பிட்டு காணாமல் போன நகைகளை பொலிஸார் மதிப்பிட்டு வருகின்றனர்.
உரிய சம்பளம் கொடுக்காததால் திருடினேன்
ஐஸ்வர்யா வீட்டில் நடந்துள்ள இந்த நகை திருட்டு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ஏன் திருட்டு வேலையில் ஈடுபட்டேன் என்பது குறித்து பணிப்பெண் ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்கு 30 ஆயிரம் தான் சம்பளம் கொடுப்பதாகாவும், அந்த பணம் தனது குடும்பத்திற்கு போதவில்லை எனவே சின்ன திருட்டு வேலைகளை செய்து வந்ததாகவும், அதை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டில் இறங்கியதாவும் பணிப்பெண் ஈஸ்வரி கூறியுள்ளார்.
Aishwarya Rajinikanth with her father Rajinikanth