அதிமுகவில்
,
இடையிலான சட்டப் போராட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதை எடப்பாடி தரப்பு மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறது. மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க ஆலோசித்து கொண்டிருக்கிறது.
அதிமுக வழக்கில் தீர்ப்பு
முன்னதாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நீதிபதி குமரேஷ் பாபு வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயர் நீதிமன்றம் உத்தரவு
அதில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் வழிநடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் முறை ஏற்படும். அவர்கள் தான் மீண்டும் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும்.
பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
ஏற்கனவே ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே 2,460 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லுபடியாகும். அதன்படி, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்தது, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் செல்லும்.
ஓபிஎஸ் நீக்கம்
ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை பொறுத்தவரை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். அதேசமயம் ஓபிஎஸ்சை நீக்கும் முன்பு 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் இடைக்கால தடை விதித்தால் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
கட்சிக்கு இழப்பு
எனவே ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எப்போதுமே தீர்ப்பை முழுமையாக படித்தால் தான் விஷயமே புரியும். தற்போதும் அதுதான் நடந்துள்ளது. முறையாக நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை எனத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேல்முறையீட்டு வழக்கு
அதுமட்டுமின்றி ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய தீர்மானம் பற்றி பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வாக்காளர் பட்டியலே இல்லாமல் தேர்தல் நடந்திருக்கிறது. இத்தகைய விஷயங்களை மேல்முறையீட்டு வழக்கில் நாளை நாங்கள் சொல்லத் தான் போகிறோம் என்று தெரிவித்தார்.