அதானி குழும நிறுவனங்கள் மீது பணமோசடி, பங்குச் சந்தை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப் பிறகு பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
சுமார் 105 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை அதானி குழுமப் பங்குகள் சந்தித்த நிலையில் சில வாரங்களுக்குப் பங்குச் சந்தையே கடும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து கவுதம் அதானியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்திலிருந்து 35-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அதானி நிறுவனம் மீதான புகார்களும் சர்ச்சையும் இன்னமும் தொடரும் நிலையிலும் அதானி நிறுவனப் பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையமான இ.பி.எஃப்.ஓ (EPFO) தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதானி குழுமப் பங்குகளில் அதிக ரிஸ்க் இருப்பதால்தான் எஃப்ஐஐ முதலீட்டாளர்களும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் முதலீடு செய்யாமல் விலகி இருக்கிறார்கள்.
ஆனால் தொழிலாளர்களின் நலனுக்காகத் திரட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவரும் பிஎஃப் பணத்தை அதானி பங்குகளில் முதலீடு செய்வது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் மொத்தம் 27.73 கோடி தொழிலாளர்கள் இ.பி.எஃப்.ஓ ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வருங்கால ஓய்வு நிதியை ஆணையம் நிர்வகித்து வருகிறது.
இந்தப் பணம் முழுக்க முழுக்க மக்களின் ஓய்வுகால தேவைக்கானது. வயது முதிர்ந்து உழைத்து சம்பாதிக்க முடியாத நிலையில் பலன் அளிக்கும் விதமாக சேமிக்கப்படும் பிஎஃப் நிதியை ரிஸ்க் அதிகமான பங்குகளில் முதலீடு செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதானி நிறுவனத்தின் மீதான புகார்களால் அவற்றின் பங்குகள் அதள பாதாளத்திற்கு சென்ற பின்பும் அதானி குழுமத்தின் 2 நிறுவன பங்குகளில் தொடர்ந்து பிஎஃப் நிதியை முதலீடு செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவற்றில் பிஎஃப் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை கடந்த 3 மாதத்தில் 55 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்கு விலை 23 சதவிகிதமும் சரிவு கண்டுள்ளன. இந்தச் சரிவுக்குப் பின்னும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது சரியான நடவடிக்கை அல்ல என்ற குரல் தொழிலாளர்களிடையே வலுவாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இபிஎப்ஓ அறங்காவலர்கள் குழு உடனடியாக முடிவெடுக்கப்பட்டால் மட்டுமே அதானி பங்குகளில் முதலீடு செய்வது வாபஸ் பெறப்படும். இல்லாவிட்டால் வரும் 30-ம் தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்திற்கு அதானி பங்குகளை இ.பி.எஃப்.ஓ வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதானி பங்கு முதலீடுகளால் இபிஎஃப்ஓ முதலீட்டு மதிப்பில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். இது பிஎஃப் உறுப்பினர்களின் பணத்தில் கணிசமான தாக்கத்தை எழுப்பவே செய்யும்.