சென்னை: ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, மக்களவை எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார். இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று கருப்பு உடை அணிந்தும், ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
பின்னர், பேரவை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர். ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பேசினார். அதற்கு பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இருவர் பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் செல்வப் பெருந்தகை கூறியதாவது: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை 24 நாட்களில் நடத்தி முடித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 24 மணிநேரத்தில் அவர் தகுதி இழப்பு செய்யப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவிக்கிறது. இதை கண்டித்து பேரவையில் பேசினோம்.
பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததும், அவைக் குறிப்பில் இருந்து நாங்கள் பேசியது நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் அவைக் குறிப்பில் பதிவிடவில்லை என்றும் தெரிவித்தார். ஒரு ஜனநாயகப் படுகொலை குறித்து நாங்கள் பேசியதை அவைக் குறிப்பில் பதிவு செய்யாதது வருத்தத்துக்குரியது. எனவே, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
ஜனநாயகப் படுகொலையை கண்டித்து கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்தோம். இப்போது வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஜனநாயக விரோத சக்திகளுக்கு யாரும் துணைபோகக் கூடாது. ராகுல் காந்திக்கு இன்று வந்த நிலைமை அனைத்து உறுப்பினர்களுக்கும் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.