பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய நிலையில் இடஒதுக்கீடு விவகாரங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது; இது தேர்தலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் வேட்பாளர்களை அறிவிப்பது, தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்வது என கர்நாடகாவின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் களமிறங்கின. இந்த கட்சிகளுடன் ஓவைசி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவையும் கர்நாடகா தேர்தலில் களமிறங்குகின்றன.
கர்நாடகா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிய சில மாதங்களாகவே இடஒதுக்கீடு விவகாரங்களும் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் பிரதான ஜாதிகள். இவர்கள்தான் கர்நாடகா தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்கள். கடந்த ஆண்டின் இறுதியில் கர்நாடகா சட்டசபையில் எஸ்சி இடஒதுக்கீட்டை 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்தவும் எஸ்டி இடஒதுக்கீட்டை 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்தவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து லிங்காயத்துகளின் உட்பிரிவினர் பஞ்சமசாலி லிங்காயத்துகள், ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டில் பிரிவு 3B-ல் 5% இடஒதுக்கீடு பெறுவதை மாற்றி 2A-க்குள் தங்களை கொண்டு வந்து 15% இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தினர். கர்நாடகா அரசியலை உலுக்கும் வகையில் பஞ்சமசாலி லிங்காயத்துகள் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்திக் காட்டினர். பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத்துகளின் இந்த போராட்டம் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டில் கை வைக்கவும் கர்நாடகா பாஜக அரசு முடிவு செய்தது. லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடா ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டில் 6% இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டது கர்நாடகா அரசு. இந்த முடிவுக்கு கர்நாடகா பிராமணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா பாஜக அரசின் முடிவானது, பிராமணர் எதிர்ப்பை மையமாக கொண்டது எனவும் உக்கிரம் காட்டியது.
இதன் உச்சமாக கர்நாடகாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலான முஸ்லிம்களுக்கான 4% உள் இடஒதுக்கீடு என்பதை காலி செய்வதாக அறிவித்தது. இந்த 4% இடஒதுக்கீடு லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்களுக்கு சமமாக பங்கீடு செய்வதாகவும் அறிவித்தது கர்நாடகா அரசு. இதனால் முஸ்லிம்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு திரும்ப வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்படுகிறது. கர்நாடகா தேர்தல் களத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பறிப்பு பிரதான ஒன்றாகவும் இருக்கப் போகிறது. மேலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பறிப்பை ஏற்க முடியாது என பாஜகவின் வாக்கு வங்கியான பஞ்சமசாலி லிங்காயத்துகளும் போர்க்கொடி தூக்கி இருப்பது பாஜகவுக்கு பெரும் தலைவலியாகும்.
இன்னொரு பக்கம், தலித்துகளில் பஞ்சாரா ஜாதியினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதன் உச்சமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டை தாக்கி உள்ளனர். பாஜக மீதான கோபத்தை எடியூரப்பா வீடு மீது தாக்குதல் நடத்தி காட்டி உள்ளனர் பஞ்சாரா ஜாதியினர். இப்படி இடஒதுக்கீடு எனும் தேன்கூட்டில் ஆங்காங்கே பாஜக அரசு கை வைக்க முயற்சிக்கிறது. ஆனால் இந்த தேன்கூட்டில் வைக்கும் நெருப்பானது கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு தேர்தல் களத்தில் தமக்கு தாமே தலையில் வைக்கும் கொள்ளியாக இருக்கப் போகிறது என எச்சரிக்கை விடுக்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.