2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதியடைந்துவரும் ஸ்ரேயாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ரானா நியமிக்கப்பட்டுள்ளார். முதுகு பகுதி காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாசுக்கு பதில் நிதிஷ் ரானா கொல்கத்தா கேப்டனாக செயல்படுவார் என்று அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்து நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் விளையாடுவார் என நம்புவதாகவும் கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, விபத்தில் படுகாயமடைந்து தற்போது உடல்நலம் மீண்டுவரும் டெல்லி அணியின் ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடாததால் அவருக்கு பதில் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.