கோவையிலிருந்து சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் 80 சதவீதம் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை எனவும் அதிகாரிகள் மீது புகார் கூறுகின்றனர் விவசாயிகள்.
இரண்டு யூனிட் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் ஒரு லாரியில் கொண்டு செல்லப்படுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வரக்கூடிய சூழல் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாய நிலங்களிலும் மலையடிவார பகுதிகளிலும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல அடி ஆழத்திற்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், மலைப்பகுதியை ஒட்டி பல அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்படுவதால் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் பல விவசாய நிலப்பகுதிகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்டு சட்டவிரோதமாக அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்திருக்கும் கிணத்துக்கடவு பகுதி பச்சை கம்பளம் விரித்தாற்போல் எங்கு பார்த்தாலும் பசுமையான சூழல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இதற்கு மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு இந்த பகுதியில் அதிகமாக இருப்பதன் காரணமாக விவசாயம் செழித்து காணப்படுகிறது.
தென்னை, வாழை, தக்காளி, கரும்பு போன்ற பல்வேறு விவசாய பயிர்கள் கிணத்துக்கடவு பகுதியில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகளவிலான கனிம வளங்கள் விவசாய நிலப் பகுதிகளை ஒட்டியும் ஒரு சில விவசாய நிலங்களிலும் எடுக்கப்பட்டு வருவதால் நீர்வழிப் பாதை தடைபட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றால் சோலைவனமாக இருந்த கிணத்துக்கடவு பகுதி பாலைவனமாக மாறிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள் பெரும்பாலும் கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. பெரிய ராட்சத டிரக்குகளில் கிராம சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் இயங்கி வருவதால் சாலைகளும் பழுதடைந்து விடுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான இந்த கனிம வள கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து முயற்சி செய்தும் குவாரிகள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM