தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை விமான நிலையம் தொடர்பாகக் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு இன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், “பல இடங்களில் மாநில அரசிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசால் தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒரு நிறுவனமான அதானிக்கு…” எனக் கூற, அவைத்தலைவர் அப்பாவு சிரித்தபடி தம்ஸ் அப் செய்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “மத்திய அரசுக்கு வெளிப்படையாக நிலத்தைக் கொடுக்காமல் குத்தகைக்குக் கொடுக்க ஒப்பந்தம் போட வேண்டும் எனக் கேட்கிறோம். அதை நிறைவேற்ற இங்குள்ள உறுப்பினர்களும், அவர்கள் கட்சியின் (மத்திய) அமைச்சரிடம் பேசினால் நன்றாக இருக்கும்” என்றார். அதை மறுத்து பேசத் தொடங்கிய வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மேலும் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அ.தி.மு.க-வின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் மொத்தமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 507, அதில் 269 மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க அரசு அறிவித்த காலை உணவுத் திட்டத்தை நாங்கள் கொண்டுவந்து சிறப்பாக நடத்திவருகிறோம். இப்படி மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் எதெல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு பாயின்ட்ஸ் இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இரண்டு, மூன்று பேர்தான் இருக்கிறார்கள்” என பா.ஜ.க-வை சைலென்ட்டாகக் கலாய்த்தார்.
அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பதிலுரையின்போது வேல்முருகனைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ”உறுப்பினர் வேல்முருகன் அப்படியாச்சும் தன் தொகுதிக்கு கேட்டு வாங்கிவிடலாம் எனப் பார்க்கிறார். அது நிச்சயம் நிறைவேறும். கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்றார். உடனே சபாநாயகர் அப்பாவு, “அப்படியா, எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு பண்ருட்டி பலாப்பழத்தைக் கொடுத்துடுங்க” என்றார்.
தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர், “முதலமைச்சர் ஸ்டாலின், பதவிக்கு வந்த பின்பும் ஓய்வுபெறவில்லை. இன்றும் ஆக்டிவாக ’70-வயதில்’ இளைஞர்போல் இருக்கிறார், நாங்கள் சிறுவயதில் எப்படிப் பார்த்தோமோ அப்படியே இருக்கிறார்” என்றதும், குலுங்கிச் சிரித்த முதல்வரைப் பார்த்து ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது. இறுதியாகப் பேச்சை முடிக்கும்போது, அவையில் பேசுவதையே மறந்து ‘இந்த நிகழ்ச்சியில்’ பேசியது என அமைச்சர் சொன்னார். இதைக் கேட்டு முதலமைச்சரே மேசையைத் தட்டிச் சிரித்தார். அதற்கு அமைச்சர், “திடீரென கூட்டத்தில் பேசியது நியாபகம் வந்துவிட்டது” என நினைவலையில் மிதந்தபடி விடைபெற்றார்.
தி.மு.க உறுப்பினர் யுவனேசன் பேசியபோது, “வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர், இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதிக்கு நன்றி” என துதி பாடினார். சரி… ஆளுங்கட்சிதான் இப்படியென்றால், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணியோ, “சுய உதவிக் குழுக்கள் வழங்கும் தொகை விரைந்து தரப்படுமா?” என்னும் கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்க பேசத் தொடங்கிய உதயநிதிக்கு, மேசையைத் தட்டி ஆரவாரம் செய்யப்பட்டது. பின்னர் பேசிய உதயநிதி, “பெண்கள் முன்னேற்றத்துக்கு வழங்கும் சுய உதவிக்குழு நிதி ‘கடன் தொகை’ அல்ல, அது ‘நம்பிக்கைத்தொகை’ ” எனப் பேசி அசத்தினார்.
அப்போது ஜி.கே.மணி நன்றி சொல்லி அமர்ந்துவிட்டு, “மீண்டும் அமைச்சர் பேச வேண்டும்” என அடம்பிடித்தார். அதற்கு, “நான் ஆழமான பதிலைத் தெரிவித்தேன், நீங்களும் அதற்கு ஆழமான நன்றியைத் தெரிவித்துவிட்டீர்கள். ஒருவேளை வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள்” என்றார் உதயநிதி. சுய உதவிக் குழுக்களுக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாகக் கேள்வியை எழுப்பிய ஜி.கே.மணி, “இப்படி ஒரு நல்ல அமைச்சர் இந்தத் துறைக்குப் பணியாற்றுகிறார். அவர் மேலும் உயர வேண்டும்” எனப் புகழ்ந்து தள்ளினார்.
ஒருபக்கம் சட்டமன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது, அ.தி.மு.க வழக்கின் தீர்ப்பும் வெளியானது. தீர்ப்பு வெளியானதை அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள்ளேயே கொண்டாடத் தொடங்கினர். அனைவரும் கையை உயர்த்தி இரட்டை இலையைக் காட்டியபடி வெளியேறினர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபைக்கு இன்று வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.