சபரிமலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த பேருந்து, நிலக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. தமிழகத்தைச் சேர்ந்த 64 பேர் கொண்ட பக்தர்கள் குழு சபரிமலையில் தரிசனம் முடித்து சொந்த ஊருக்கு திரும்பும் வலையில் கேரளா மாநிலம் நிலக்கல் அருகே நண்பகல் 1 மணியளவில் விபத்து நடைபெற்றது.
இலவுங்கலுக்கும் கானமலக்கிற்கும் இடையில் நாரணம் ஓடைக்கு அருகில் பேருந்து வந்து கொண்டிருந்த பொது, ஓட்டுனரின் கட்டுப்பாட்ஃபில் இருந்து விலகிய பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 9 குழந்தைகள் உட்பட்ட அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே காவல்துறை மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கோட்டயம் மருத்துவக் கல்லூரி, நிலக்கல் மருத்துவமனை மற்றும் பத்தனம்திட்டா பொது மருத்துவமனை என காயமடைந்தவர்கள் பல மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பக்தர்கள் குழு தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்து செல்கின்றனர். அதோடு, வந்து செல்லும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்துக் கொடுப்பது, கடைகள் என அந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாகி வருகிறது.
அதிலும் சபரிமலை தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும்போது, அதிகப்படியான கூட்டம் கூடிடுவதால் வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.