சிறுமியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி அடுத்த பொறையூரை சேர்ந்தவர் பழனி மகன் பிரதீஷ் 23; இவரும் சுத்துக்கேணியை சேர்ந்த கல்லுாரியில் பயின்ற 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்தனர்.
இந்நிலையில் கடந்த 20.04.2021 அன்று கல்லுாரி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்க செல்வதாக வீட்டில் கூறிய சிறுமி பிரதீஷை சந்திக்க பொறையூர் சென்றார்.
அப்போது சிறுமி வேறு ஒரு நபருடன் பழகுவதாக பிரதீஷ் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ‘என்னை காதலிப்பது உண்மை என்றால் எனது தாய் புதைத்த இடத்தில் சத்தியம் செய்ய வேண்டும்’ என பிரதீஷ் சிறுமியிடம் வலியுறுத்தினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த சிறுமியை பொறையூர் சுடுகாட்டிற்கு பிரதீஷ் அழைத்து சென்றார். அங்கு சென்றவுடன் திடீரென சிறுமியை கட்டையால் தலையில் அடித்தார். மயங்கி விழுந்து சிறுமியின் உடல் முழுவதும் உடைந்த கண்ணாடி பாட்டிலால் கிழித்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி சுடுகாட்டின் ஓரத்தில் வீசிவிட்டு சென்றார்.
வில்லியனுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து பிரதீஷை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன் கொலை குற்றத்திற்காக பிரதீஷிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கிட அரசுக்கு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement