செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் ஒன்று பரிதாபமாக பலியானது. செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் கண்ணாப்பேட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள மலைப்பகுதியில் சிலநாட்களாக மயில்கள் கூட்டம் கூட்டமாக தஞ்சமடைந்துள்ளன. இந்த மயில்கள் ஆங்காகாங்கே இரையைத்தேடி சுற்றி வருகின்றன. இந்த மலைப்பகுதியின் எதிரே ஏரி இருப்பதால், அனைத்து மயில்களும் தண்ணீருக்காக சாலையை கடந்துதான் எதிர்புறம் செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று மாலை ஒரு ஆண் மயில் மலைப்பகுதியை கடந்து எதிர்திசையில் உள்ள ஏரியில் தண்ணீர் குடிக்க சென்றது.
அப்போது, அங்குள்ள உயரழுத்த மின்கம்பியில் மோதியதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்த மயிலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மலைப்பகுதியில், தினமும் மாலை நேரங்களில் மயில்கள் தோகையை விரித்து நடனமாடி வருவதை கண்டு ரசித்த அப்பகுதி மக்கள் தற்போது 5அடி நீளமுள்ள ஆண் மயில் ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை கண்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.