சென்னை வியாசர்பாடி, கக்கன்ஜி காலனி, ராணி மெய்யம்மை தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (49). இவர் அ.தி.மு.க-வின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார். கக்ன்ஜி காலனி முத்துமாரியம்மன் கோயில் தெரு அருகே இளங்கோவின் அலுவலகம் இருக்கிறது. அதை பூட்டிவிட்டு இளங்கோ, பைக்கில் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அதில் இளங்கோவின் தலை, முகத்தில் வெட்டு காயங்கள் விழுந்தது. ரத்தம் அதிகளவில் வெளியேறி சம்பவ இடத்திலேயே இளங்கோ உயிரிழந்தார்.
பகுதி செயலாளர் இளங்கோ கொலைசெய்யப்பட்ட தகவல் காட்டு தீ போல பரவியது. தகவலறிந்து வந்த செம்பியம் போலீஸார், இளங்கோவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் தலைமையில் வந்த போலீஸார், அங்கு விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து, கொலையாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.
இளங்கோ கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் அ.தி.மு.க-வினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் சமரசப்படுத்தினர். இந்தச் சூழலில் சிறுவன் உள்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கின்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்போது கஞ்சா போதையிலிருந்த இளைஞர்களை பகுதி செயலாளர் இளங்கோ கண்டித்ததாகவும் அதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. மேலும், கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள நில தகராறிலும் இளங்கோ தலையீட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுதொடர்பாக சரண் அடைந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.