சேலம் : மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன், தோல்வி பயத்தால் நீட் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அடுத்த வாய் நத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் சந்துரு. 19 வயதாகும் மாணவன் சந்துரு, சேலம் மாவட்டம், ஆத்தூர் அம்மாபாளையம் தனியார் பள்ளியான சரஸ்வதி பள்ளியில் இயங்கி வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார்.
மாணவன் சந்துரு ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த முறையும் தோல்வியடைந்துவிடுவோமோ? மருத்துவ படிப்பு கனவு கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மாணவன் விடுதியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் சந்துரு நீட் தேர்வு தோல்வி பயத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று, திமுகவின் தலைவர், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது வரை தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தை குறிப்பிட்டு, நீட் தேர்வு ரத்து செய்யாத திமுக-வை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.