புதுடெல்லி,
டெல்லியில் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் துணை செயலாளர் தனது காரில் அரவிந்தோ மார்க் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றபோது, சாலையில் ஒருவர் மயங்கி கிடந்து உள்ளார்.
இதனால், அந்த நபரை காப்பாற்றும் நோக்கில் காரில் இருந்து இறங்கியுள்ளார். இதன்பின்னர், ஆம்புலன்ஸ் வேன் ஒன்றை தொலைபேசி வழியே அழைத்து அந்த பகுதிக்கு வரவழைத்து உள்ளார்.
அந்த வேனில், மயங்கி கீழே கிடந்த நபரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி விட்டு திரும்பி உள்ளார். அவர் காரை நெருங்கியதும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த அலுவலக லேப்டாப், அது வைக்கும் பை ஒன்று, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் தூதரக பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஐ.டி. அட்டைகள், வங்கி அட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்தன.
இதனை அறிந்து திடுக்கிட்ட அவர் பொருட்கள், பணம் திருடு போனது பற்றி, டெல்லி போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.