தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார், இறையன்புவுக்கு வேறு ஏதும் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து கடந்த ஓரிரு மாதங்களாக கோட்டை வட்டாரங்களில் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
தலைமைச் செயலாளருக்கான ரேஸில் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா, பிரதீப் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இவர்களில் திறமையும் ஆற்றலும் அரசோடு இணைந்து செயல்படுவதில் துடிப்பான ஒருவரை முதல்வர் டிக் அடிப்பார். அது யார் என்ற கேள்வி இன்னும் ஒரு மாதத்துக்கும் மேல் உயிர்ப்புடன் இருக்கும் என்கிறார்கள்.
தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் இறையன்புவை மேலும் சில ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுவர். அந்தவகையில் இறையன்புவை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலாளருக்கு இணையானது தலைமை தகவல் ஆணையர் பதவி என்கிறார்கள். தகவல் ஆணையத்தின் பணிகள் என்னென்ன என்பதை பார்க்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்குவது, அனைத்து துறை சார்ந்த தரவுகளை கணினிமயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது .
தமிழ்நாட்டில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் கடந்த சில மாதங்களாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. தலைமை ஆணையராக இருந்த ராஜகோபால் அவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்கள் பணிக்காலம் நிறைவடைந்தது. எனவே புதியவர்களை தேடும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. அந்த குழு பரிந்துரைத்த பட்டியலில் இறையன்புவின் பெயர் உள்ளதாம்.
அந்த பட்டியலிலிருந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் முதலமைச்சர்
, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இடம்பெறுவர். எடப்பாடி பழனிசாமி இந்த பணிகளில் கலந்து கொள்ளாத நிலையில் முதல்வரும், நிதியமைச்சரும் இணைந்து இறையன்புவை தலைமை தகவல் ஆணையராக தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் தான் தலைமை தகவல் ஆணையரை நியமிப்பார். ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்தும் சட்ட மசோதாக்களையே கிடப்பில் போடும் ஆளுநர் இந்த விவகாரத்திலும் மெத்தனம் காட்டுகிறாராம். விரைவில் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்தால் தான் அடுத்தகட்ட பணிகள் நடைபெறும் என்கிறார்கள்.