மதுரை: தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பாதுகாக்கப்பட்ட தாது மணலை ஒன்றிய அரசு கண்காணிப்பது போல ஏன் ஆற்று மணலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சி தலைவர் குணசேகரன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் சுமார் 20 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதோடு சீமை கருவேல மரங்கள் நிரம்பி மணல் திட்டுக்களாக மாறிவிட்டன. இங்குள்ள குவாரிகளில் சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளுவதால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்பகுதியில் உள்ள பாலங்களின் அடித்தளமும் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தையும் பாதிக்கும் வகையில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மணல் குவாரிகள் அரசு விதிகளின்படிதான் நடப்பதாகவும், மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி பல்வேறு வழிமுறைகளை பிறப்பித்து அதன் வழியாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் பாதுகாக்கப்பட வேண்டிய தாது மணல்களை ஒன்றிய அரசு கண்காணிப்பது போல, ஏன் ஆற்று மணலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது? இதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் மணல் குவாரி தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.