உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகனுகுமார். இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதிய அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த முறையில் மெக்கானிக் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்காக, மோகனு குமார் தூத்துக்குடியில் தெர்மல் கோவில் பிள்ளை இரண்டாவது தெருவில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்ற மோகனுகுமார் அங்குள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது கழிவறையின் உள்ளே அவருடைய அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் ஓடிச் சென்றுப் பார்த்துள்ளனர். அங்கு மோகனு குமார் கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு மோகனுகுமாருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், மோகனுகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, மோகனுகுமார் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சக தொழிலாளிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.