மேகமலை வனஉயிரின சரணாலயத்தையும், ஶ்ரீ வில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் இணைத்து கடந்த 2021-ம் ஆண்டு 62 ஆயிரத்து 626 ஹெக்டேர் வனப்பகுதிகளை உள்ளடக்கி புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி கே.ஆர்.நகரில் மாவட்ட வன அலுவலகம் அருகே ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அலுவலகம் அருகே சூழல் சுற்றுலா தகவல் மையத்துக்கான கட்டடப் பணிகள் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது கட்டடத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நுழைவுவாயில் பகுதி மேற்கூரையில் கட்டட பூச்சு வேலை நடந்தது. இப்பணியில் மாரிமுத்து(37) மற்றும் அசோக் (25) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நுழைவு வாயில் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பெரியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து, அசோக் ஆகியோர் சிக்கி பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாரிமுத்து உயிரிழந்தார். காயமடைந்த அசோக் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்திடம் விசாரித்தோம். “கட்டட விபத்து குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து கொண்டிருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் சிறு கவனக்குறைவு தான் விபத்துக்கான காரணம் எனத் தெரிகிறது. கட்டடப் பணியில் தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி கட்டடம் மிகவும் உறுதியாக இருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கட்டடம் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.