சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் அனுப்பியுள்ள கடிதம்: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்கும் கடனுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு 6 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கவேண்டும். ரிசர்வ் வங்கி அடிக்கடி ரெப்போ வட்டியை உயர்த்துவதால், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் கூடுதல் வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுகின்றன.
கடன் வழங்கும்போது இரு தரப்பிலும் ஒப்புக்கொண்ட வட்டியை மட்டுமே சம்பந்தப்பட்ட வங்கிகள் வசூலிக்க வேண்டும். கடைசி தவணை செலுத்தும் வரை உயர்த்த கூடாது. முதல்வரிடம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவன் குழு வழங்கிய 50 பரிந்துரைகள் கொண்ட அறிக்கை ஓராண்டு ஆகியும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
சிப்காட் நிறுவனம் உருவாக்கும் தொழிற்பேட்டைகளில் 20 சதவீத தொழில் மனைகளை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டில் குறு, சிறு தொழில் துறை அமைச்சர் பதிவு செய்த கொள்கை குறிப்பில், ‘தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை உடனே அமல்படுத்த வேண்டும்.