புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை கூடிய சில நிமிடங்களிலேயே அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் கூடியது. சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற பெண்களான நிகத் ஜரின், லவ்லினா போர்கோஹைன், நிது கங்காஸ், சவீதி பூரா ஆகியோருக்கு ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார்.
உடனடியாக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.