நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்டவை கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் பாரங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வள்ளியூர் அருகேயுள்ள அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை மாதவி என்பவர் இன்று விபத்தில் உயிரிழந்தார். அவர் தெற்கு ஆறுபுளி கிராமத்திலுள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அவரின் கணவரின் கிராமம் திசையன்விளை அருகேயுள்ள ரம்மதாபுரத்தில் வசித்து வந்தார்.
ஆசிரியை மாதவியின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு விபத்தொன்றில் சிக்கினார். அதில் சிகிச்சை பெற்று வந்தவர் அண்மையில் உயிரிழந்தார். ஒரு ஆண், இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், தினமும் ரம்மதாபுரத்திலிருந்து தெற்கு ஆறுபுளி கிராமத்திலுள்ள பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவந்திருக்கிறார்.
வழக்கம்போல இன்று, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சீலாத்திகுளம் அருகே, அவரது வாகனத்தின்மீது கனிமவளம் ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியது. வேகமாக வந்த லாரி மோதியதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர்மீது, லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ராதாபுரம் போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள் கனரக வாகனங்களால் தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாகச் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவாரத்தை நடத்தி கலையச் செய்தனர்.
தென் மாவட்டங்களில் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இயற்கை வள பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவி அருணன் பேசுகையில், “சாலை பாதுகாப்பு விதி, மோட்டார் வாகனச் சட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் மீறி, பணம்தான் குறிக்கோள் என்ற லட்சியத்துடன் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?” என்றார்.