திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று பேரை, காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேடு கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, விசாரணை அதிகாரியாக உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு, அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து சென்று பல் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சித்திரவதை செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கை சமர்பிக்கும்படி மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.