*தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல்லை : நெல்லை, பாளைய்கால்வாய்களில் நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது கழிவுநீர் மட்டுமே செல்கிறது. ஓடை போல் காட்சியளிக்கும் இந்த கால்வாயை கோடையை பயன்படுத்தி தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு அளவில் பெய்யவில்லை. ஆயினும் அணைகளில் இருந்த நீர் பிசான பருவ சாகுபடிக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை பொய்த்த நிலையில் அணைகளில் நீர் மட்டம் கவலைகொள்ளும் அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் மேலும் அதிக மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் பிசான பருவ அறுவடைபணிகள் முடிந்துள்ளதால் அனைத்து கால்வாய்களிலும் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கால்வாய்களும் வறண்டு விட்டன. குறிப்பாக நெல்லை மற்றும் பாளையங்கால்வாய் வறண்டு விட்டது. நீருக்கு பதில் கழிவுநீர் மட்டமே ஓடுகிறது. கால்வாயுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள பல கட்டிட கழிவுகள் அதிகளவில் கால்வாயில் கலக்கிறது. மேலும் பல இடங்களில் கால்வாயில் குப்பைகள் நேரடியாக கொட்டப்படுவதால் கால்வாய் துர்வாடை வீசுகிறது.
கொசு உள்ளிட்ட கிருமிகளும் பெருக்கமடைகின்றன. பாபநாசம் அணையில் தற்போது 22 அடி அளவில்தான் நீர் இருப்பு உள்ளது. இனி மழை பெய்தால் ஜூன் இல்லது ஜூலை மாதத்தில்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த இடைப்பட்ட நாட்களில் இந்த கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பராமரிப்பு பணிகளையும் உடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.