
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை, இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டாலர் நிதியுதவி பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அடிப்படைத் தேவைகளுக்காக இந்தத் தொகையைப் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் Nashville -விலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பின்னர், அந்தப் பெண், போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

“ட்விட்டரில், `புளூ டிக்’ இருக்கும் கணக்குகள் மட்டுமே ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் ட்விட்டர் போலில் (Poll) -ல் வாக்களிக்க முடியும்’’ என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் (Binance), வர்த்தக விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பைனான்ஸ் மீது பல மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானை பூர்வீகமாகக்கொண்டவரும், முஸ்லிமுமான ஹம்சா யூசுஃப் (Hamza Yusuf) ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 52 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தற்போது ஸ்காட்லாந்தில் ஆளுங்கட்சியாக ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி இருக்கிறது.

2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் வழங்கிய நம்பிக்கையின் உரையை விண்வெளிக்கு அனுப்புவதாக வாடிகன் அறிவித்திருக்கிறது. போப்பின் உரை, இரண்டு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம்கொண்ட `நானோபுக்’ ஆகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது ஜூன் 10 -ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்படும்.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையிலுள்ள தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியாகியிருப்பதாக மெக்ஸிகோ அரசு தெரிவித்திருக்கிறது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைனுக்கு உதவிசெய்ய 18 போர் டேங்குகளை வழங்கவிருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது.