மாடலாக இருந்து ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தை 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் ‘The Hero: Love Story of a Spy’ என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு பல படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமான நடிகையானார். அதுமட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது ஹாலிவுட் தொடர்களிலும், படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்த போதிலும் வெளிநாடுகளுக்குச் சென்று ஹாலிவுட்டில் நடித்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
“பாலிவுட் திரையுலகில் என்னை ஒரு மூலையில் ஒதுக்கினார்கள். சிலர் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அங்குள்ளவர்களுடன் எனக்குப் பிரச்னை இருந்தது. அங்கு நடக்கும் அரசியலிலிருந்து எனக்கு ஓய்வு தேவைப்பட்டது.
அப்போது எனது மேனேஜர் அஞ்சுலா ஆச்சாரியா எனது மியூசிக் வீடியோவை பார்த்து அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். பின் அமெரிக்காவில் இசைத்துறையில் பணியாற்றினேன். அடுத்த கட்டத்திற்குச் செல்ல அந்த இசை எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.
ஹாலிவுட் அறிமுகத்துக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக பிரியங்கா சோப்ரா அமெரிக்காவிலேயே தங்கியிருந்து ஆங்கிலப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இது குறித்தும் வெளிப்படையாகப் பேசிய பிரியங்கா, “எனது தாயார் மது சோப்ராவின் ஆலோசனையின் பேரில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள 30களின் தொடக்கத்தில் எனது கருமுட்டையைச் சேமித்து வைத்தேன். இப்படிச் செய்வதன் மூலம் எனது கரியரில் சுதந்திரமாகக் கவனம் செலுத்த முடியும் என்பதால் செய்தேன்.
நான் இருக்கும் துறையில் எனக்கான இடம் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதோடு யாருடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்யாமல் இருந்தேன். எனவே டாக்டரான எனது அம்மாவின் ஆலோசனையின் பேரில்தான் கருமுட்டையைச் சேமித்து வைத்தேன்.
நான் எப்போதும் குழந்தைகளை அதிகமாக விரும்புபவள். குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்துகிறேன். எனவேதான் யுனிசெப் அமைப்புடன் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுக்கான தன்னார்வலராகப் பணியாற்றி இருக்கிறேன்.
பெரியவர்களை விடக் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். எங்கள் பார்ட்டி கூட குழந்தைகள் மற்றும் நாய்களுடன்தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு யார் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளை அழைத்து வரலாம்” என்றார்.
இந்நிலையில், பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் இயக்குநர் கரண் ஜோஹர்தான் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அது குறித்து பிரியங்கா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது பாலிவுட் கம்பேக்காக பிரியங்கா சோப்ரா, இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.