ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு இருந்து வருகிறார். 2009இல் முதல்முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற அவர், 2021 வரை பிரதமர் பதவியில் இருந்தார்.
தேர்தல்களில் அவரது கட்சி உட்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட பிரதமர் பதவி தனக்கு வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் அவர் பிரதமர் பதவியிலேயே தொடர்ந்தார்.
இஸ்ரேல்
இடையில் 2021இல் ஓராண்டிற்குச் சற்று மேல், இவரைத் தவிர்த்து அங்கே கூட்டணி அரசு அமைத்தது. இருப்பினும், அது சில மாதங்களுக்கு மேல் நீட்டிக்கவில்லை. 2022 இறுதியில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தார். நெதன்யாகு மீது ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவர் நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு எதிராகத் தான் அங்கே மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டம்
நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நெதன்யாகு சட்டத்தைக் கொண்டு வர முயல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்ரேல் அதன் வரலாற்றில் மிகக் கடுமையான உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அங்கே நீதித்துறை அமைப்பு செயல்படும் விதத்தை மாற்ற அரசு முயலும் நிலையில் அது மிகப் பெரிய போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அரசின் திட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அது இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவ் உட்பட நாடு முழுக்க மிகப் பெரியளவில் போராட்டம் நடந்து வருகிறது. வீதிகளில் மக்கள் அதிகம் குவிந்து வருவது, அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரிப்பதைக் காட்டுகிறது. இஸ்ரேல் அரசு தனது திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். குறிப்பிட்ட கட்சி என்று இல்லாமல் இந்த விவகாரத்தில் நெதன்யாகு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
ஜனநாயக விரோதம்
குறிப்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையிலும் பலரும் பணிக்க வர மறுத்துள்ளனர். இது இஸ்ரேல் பாதுகாப்பையே ஆபத்தில் தள்ளுவதாக உள்ளது. இருப்பினும் நெதன்யாகு தனது திட்டத்தில் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. இப்போது நீதித்துறை இடதுசாரி பக்கம் சாய்வதாகக் கருதும் நெதன்யாகு, நீதித்துறைக்குக் கூடுதல் பொறுப்புகளை வழங்கவே முடிவு செய்துள்ளதாகவும் இதைத் தடுப்பது ஜனநாயக விரோதம் என்றும் சாடுகின்றனர்.
என்ன பிரச்சினை
இஸ்ரேல் அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகவே அந்நாட்டின் நீதித்துறை இத்தனை காலம் இருந்துள்ளது. அந்த நீதித்துறையைப் பலவீனப்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயல்வதாகப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர். நெதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த மாற்றங்கள் அவரை காப்பாற்றும் என்றும் இதற்காகவே அவர்கள் அவசரமாக இதைக் கொண்டு வர முயல்வதாகச் சாடியுள்ளனர். மேலும் இதன் பிறகு அரசைக் கண்காணிக்க யாருமே இல்லாத நிலை உருவாகும் என்றும் விமர்சித்துள்ளனர்.
நெதன்யாகு பிளான் என்ன
அரசு கொண்டு வரும் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது செல்லாது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்படும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரத்தை அரசுக்குத் தருகிறது. சுப்ரீம் கோர்ட் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் யார் நீதிபதியாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தைத் தரும் வகையில் கமிட்டியில் அரசு பிரதிநிதிகள் அதிகரிக்கப்படும். அட்டர்னி ஜெனரலின் வழிகாட்டுதலால் இயங்கும் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளை அமைச்சர்கள் கேட்க வேண்டியது கட்டாயமில்லை.
பிளான் என்ன
அங்கே பதவியில் இருக்கும் பிரதமரைப் பதவிக்குத் தகுதியற்றவர் என்று அறிவிக்கும் அதிகாரம் அட்டர்னி ஜெனரலுக்கு இருந்தது. இந்த அதிகாரம் நீக்கப்படும் சட்டம் ஏற்கவே அமல்படுத்தப்பட்டு விட்டது. நெதன்யாகு உடனான விரிசல் காரணமாக அட்டர்னி ஜெனரல் அவரை தகுதிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு முன்னதாகவே நெதன்யாகு அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.
நெதன்யாகு அறிவிப்பு
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டத்தைக் கொண்டு வருவதை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படச் சட்டம் கொண்டு வருவதைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், சட்டம் கொண்டு வருவதைத் தள்ளி மட்டுமே வைத்துள்ளதாகவும், எப்படியும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகு கூட்டணி அரசின் இப்போது நடக்க அமைச்சரவையில் இருக்கும் வலதுசாரிகள் ஆதரவு நெதன்யாகுவுக்கு நிச்சியம் தேவைப்படுகிறது. அவர்கள் இந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் நெதன்யாகு இதைக் கொண்டு வருவார் என்றே தெரிகிறது.