டெல் அவிவ்,
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வகைசெய்கிறது.
இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து பல வாரங்களாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். வரலாறு காணாத இந்த போராட்டம் இஸ்ரேலை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீத்துறை மசோதாவை கைவிடும்படி இஸ்ரேல் அரசை வலியுத்தினார். இதனையடுத்து ராணுவ மந்திரி யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இதனிடையே பிரதமரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி அசாப் ஜமீர் பதவி விலகினார். சர்ச்சைக்குரிய சட்டமாசோதாவை கைவிடும்படி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை வலியுறுத்தியுள்ளார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் நாட்டினரும் பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நீதித்துறையை மாற்றியமைக்கும் மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவிப்பை ஏற்று, போராட்டங்களை கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால், போராட்டம் வாபஸ் பெற்றதற்கான முறையான அறிவிப்பு கிடைக்காததால், இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. அவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர்.