தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை வாயிலாக வெளியாக தகவல்களை குறித்த செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர
செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கட்டணமில்லா பயண வசதியினை திருநங்கைகளுக்கு விரிவுப்படுத்தியதன் வாயிலாக 14.75 பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு கட்டண வயது
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அமல்படுத்தப்பட்டு பயனடைந்து வருகின்றனர். நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, இணையவழிப் பயணச் சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 6,615
பயணிகள் பயன் அடைந்துள்ளனர்.
14-வது ஊதிய ஒப்பந்தம்
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தமானது கடந்த 01.09.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பணியின் போது உயிரிழந்த 132 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Chennai Bus App
“Chennai Bus App” கைபேசி செயலி மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகள் வருகை மற்றும் புறப்பாடு, தடத்தில் வரும் இடம் ஆகியவற்றை பயணிகள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பக்கவாட்டுகளில் உள்ள பயணச் சுமை பெட்டிகளை மாதாந்திர மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பயணம் செய்யாத நபர்களின் சிப்பம் மற்றும் தூதஞ்சல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.31 லட்சம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
பெட்ரோல்/டீசல் சில்லரை விற்பனை
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல்/டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக கட்டடங்கள் / பணிமனைகளின் கூரைகளில்
சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்பட்டு, மின்சார செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.
விளம்பர வருவாய், அடுத்த பேருந்து நிறுத்த அறிவிப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் ஏனைய வருவாய் அதிகரித்து வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இதனை அமுல்படுத்தி வருவாயைக் கூட்ட அறிவுரை வழங்கப்பட்டது.