குன்றத்தூர்: கடந்த காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் மிக முக்கிய பங்கு வகித்து வந்தன. இவை சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி, தாகத்தை தீர்த்து வந்த போதிலும், தற்போதைய மக்கள் தொகை பெருக்கம், பருவமழை பொய்த்தல், குறைந்த அளவிலான மழை பெய்தல் போன்ற பல்வேறு காரணங்களால் மேற்கண்ட ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் ஆனது சென்னை மக்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே, மாற்று திட்டம் என்னவென்று யோசித்தபோது, கடல்நீரை குடிநீராக மாற்றி, மக்களுக்கு வழங்கலாம் என்ற திட்டம் உதித்தது. ஆனால், அத்திட்டத்திற்கான செலவுகள் அனைத்தும் மிக மிக அதிகம் என்பதால் அரசாங்கமே அத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை. இவ்வாறு இருக்கையில் சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை தீர்ப்பதில் வரப்பிரசாதமாக அமைந்தது.
புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியிருக்கும் மழைநீர், கடந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் நீர் மட்டம் குறைந்தபோது, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் சேகரமாகியிருந்த மழைநீர் சுத்திகரிப்பு செய்து, சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்பட்டது. அது முதல் மக்கள் மற்றும் அரசின் பார்வை கல்குவாரி குட்டைகள் மீது திரும்பத் தொடங்கியது. அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்கள் சிந்திக்க தொடங்கினர். இந்நிலையில், கல்குவாரி குட்டைகள் மக்களின் தாகம் தீர்ப்பதில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அந்த அளவிற்கு அதில் ஆபத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. குறிப்பாக, கோடை காலம் வந்தாலே பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் இளம் வயதினர், அதிக அளவில் இதுபோன்ற கல்குவாரி குட்டைகள், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றை சுற்றிப்பார்க்க தங்களது நண்பர்களுடன் வருகை புரிகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் இயற்கை எழில் சூழ்ந்து, நீர் நிறைந்து காணப்படும் கல்குவாரி குட்டையின் அழகில் மயங்கி, ஆர்வ மிகுதியில் அதிலிருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி குளித்து மகிழ்கின்றனர். இதனால், பலர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். வேறு சிலரோ தங்களது வீடுகளில் நடக்கும் குடும்ப சண்டை, காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் மனமுடைந்து, அருகில் இருக்கும் கல்குவாரி குட்டைகளில் விழுந்து தங்களது இந்நுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால், கல்குவாரி குட்டையில் விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தொடர் மரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, இறந்தவர்களின் உடல்கள் கிடைப்பதில் சில சமயங்களில் இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகிறது. அதுவரை இறந்தவர்களின் உடல் தண்ணீரிலே கிடந்து, அழுகி வருவதால், அந்த நீர் கடுமையாக மாசு அடைகிறது.
அவற்றை என்னதான் முறையாக சுத்திகரிப்பு செய்தாலும் கூட, அந்தத் தண்ணீரை உபயோகப்படுத்தும் மக்களுக்கு நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், எதிர்கால மக்களின் நலன் கருதி, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, கல்குவாரி குட்டைகள் அமைந்துள்ள பகுதிகளை அரசு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தவிர பொதுமக்கள், வாகனங்கள் அத்துமீறி நுழைவது தடுக்கப்பட வேண்டும். மீறுவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும். இதன்மூலம் தற்கொலை, நீரில் மூழ்கி பலியாவது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
மேலும், கல்குவாரி குட்டையின் நீரும் மாசு படாது. கல்குவாரி குட்டைகள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றிலும் இரும்பு கம்பி வலைகளை கொண்டு உயரமான தடுப்புகள் அமைக்க வேண்டும். இதனால் ஆடு, மாடு, நாய், கோழி போன்ற விலங்குகள், பறவைகள் உள்ளே விழுந்து இறப்பது தடுக்கப்படும். அத்துடன் அதில் உள்ள ஆபத்துக்களை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில், பெரிய அளவில் ‘எச்சரிக்கை’ விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். அத்துடன், குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பது போன்று, கல்குவாரி குட்டைகளையும், அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, போதிய அளவில் சிசிடிவி கேமரா, மின் விளக்குகள் அமைத்து, 24 மணிநேரமும் நேரடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இதன் மூலம் வருங்காலங்களில் கல்குவாரி குட்டைகள், ‘தற்கொலை செய்து கொள்ளும் இடம்’ என்ற எண்ணம் மாறி, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கும் தெரியவரும். இனி வரும் கோடை காலங்களில் மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்று கல்குவாரி குட்டைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.