சென்னையின் முக்கிய சாலைகளில் பீட்டா அமைப்பால் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை ஒன்று, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதாகையில், `நீங்கள் ஒரு பெண்ணியவாதி என்று கூறிக்கொண்டு முட்டை சாப்பிடக் கூடாது (you can’t claim to be a feminist and still eat eggs.). முட்டை மற்றும் பால்பொருள்கள் அனைத்தும் பெண் விலங்குகளைத் துன்புறுத்திப் பெறப்படுபவை’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முறை அல்ல!
இதே வார்த்தைகளைத் தாங்கிய பதாகைகள் 2018-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் வைக்கப்பட்டன. அப்போதே இதுதொடர்பாக சர்ச்சைகள் வெடித்தபோது, “தங்களைப் பெண்ணியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் பலர், நாள்தோறும் பெண் விலங்குகளுக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறையை ஆதரிக்கின்றனர். அவற்றை துன்புறுத்துவதன் மூலம் கிடைக்கும் பொருள்களை உட்கொள்கின்றனர்” என்று விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விளம்பரத்தின் நோக்கம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவை உட்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, வீகன் உணவு முறைக்கு மாற வேண்டும் என்பதே. தாவரங்கள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கிடைக்கும் உணவுப்பொருள்களை மட்டுமே உட்கொள்வதே வீகன் உணவு முறையாகும். தற்போது இந்த விளம்பரமானது சென்னையின் பிரதான இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக்கிடம் பேசினோம்…
“பாலில் பி12, கால்சியம், புரதம், நல்ல கொழுப்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துகள் காணப்படுகின்றன. முட்டையில் புரசத்தத்து நிறைய உள்ளது. குறைந்த விலையில் புரதச்சத்து கிடைப்பதற்கான ஆதாரம் முட்டைதான்.
சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் புரதம் உள்ளிட்ட சத்துகளுக்கு பால் மற்றும் பால் பொருள்களை மட்டும்தான் சார்ந்திருப்பார்கள்.
நாம் உண்ணும் உணவை உடல் எவ்வளவு கிரகிக்கிறது என்பதை Bioavailability என்பார்கள். முட்டைக்கு இது 100% உண்டு. அதனை உடல் முழுவதுமாக கிரகித்துக் கொள்ளும். முழு முட்டையாகச் சாப்பிடும்போது புரதச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து வைட்டமின் சத்துகளும் இதில் கிடைக்கும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாட்டில், முட்டையும், பாலும்தான் புரதச்சத்துக்கான ஆதாரமாக உள்ளன. அதுகுறித்து தவறான கருத்துகளைப் பரப்புவதன் மூலம் பொதுமக்கள் அவற்றைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களிடையே புரதச்சத்து குறைபாடு ஏற்படும். குழந்தைகளுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் வளர்ச்சி மற்றும் எடையும் பாதிக்கப்படும்.
வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் எடையும் இல்லையென்றால் அவர்களின் உற்பத்தித் திறன் குறையும். இதனால் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் மாணவர்கள் பின்தங்கக்கூடும். புரதச்சத்து குறைபாடு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய்த்தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. புரதச்சத்து உடலில் போதுமான அளவு இருந்தால் தொற்றுநோய்கள் எளிதில் தாக்காது. அப்படியே நோய்கள் தாக்கினாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. வளரும் தலைமுறை ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்தால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் வாய்ப்புள்ளது.
புரதம் கிடைக்கும் ஆதாரங்களை விலங்குகளிடமிருந்து பெறப்படுபவை, விலங்குகளிடமிருந்து பெறப்படாதவை என்று இரண்டாகப் பிரிப்பார்கள். விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவில்தான் உடல் கிரகிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்துமே முட்டை, இறைச்சி, பாலில் அதிகமாகக் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவை என்பதால்தான் மதிய உணவுத்திட்டத்தில் தினமும் ஒரு முட்டை கொடுக்கப்படுகிறது.
துன்புறுத்திப் பெறப்படுகிறதா?
தானியங்களை உற்பத்தி செய்யும் பயிர்கள், பழங்களைக் கொடுக்கும் மரங்கள் என அனைத்துமே பெண் இனம்தான். தாவரங்களில் பெண் இனங்களைச் சாப்பிடுவது சரியான விஷயமா? மனிதன் என்பவன் தாவரம் மற்றும் விலங்குகளை உண்ணும் அனைத்துண்ணி (Omnivorous) வகையைச் சேர்ந்தவன்.
தான் வசிக்கும் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவன். தங்களுடைய கலாசார நம்பிக்கைகள், நிலவியலுக்கு ஏற்றாற்போல் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுகிறார்கள். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நடைபெறும் உணவுச் சங்கிலி இது. அதில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இருப்பதையும் கெடுத்துவிடக்கூடாது” என்றார்.
இது தொடர்பாக பெண்ணியவாதியான வசுமதியிடம் பேசினோம்…
“முதலில் பெண்ணியவாதிகள் என்றால் பெண்கள் மட்டுமே என்ற தவறான கருத்து உள்ளது. தலைசிறந்த பெண்ணியவாதி என்று பெரியாரைச் சொல்கிறோம். பெண்ணியம் என்பது ஒரு கருத்தியல். இன்றும் பல ஆண்கள் பெண்ணியவாதம் என்ற கருத்தை ஆதரிக்கின்றனர். பெண்களைவிட அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் பல ஆண்கள் உள்ளனர்.
பெண்ணியவாதம் என்ற கருத்தியல் தற்போதுதான் உருவெடுத்துள்ளது. ஆனால் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது என்பது மனிதன் தோன்றியபோதிலிருந்தே உள்ள விஷயம். பெண்ணியம் என்ற கருத்தியல் தேவையின் அடிப்படையில் உருவானது. காற்று மாசுபட்டுள்ளது என்று கூறினால் ‘சுவாசிக்கவே செய்யாதீர்கள்’ என்று சொல்வதைப்போல் உள்ளது.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்குமானதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மனித உணவுச் சங்கிலி என்ற அறிவியலையும் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு என்பதன் கருத்தியலைப் புரியாமல் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வந்து, தமிழகமே கொதித்தெழுந்ததைப் பார்த்தோம். இதைப்போல் தெளிவே இல்லாமல்தான் இந்த விஷயத்தையும் கையாண்டிருக்கிறார்கள்” என்றார்.
அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இந்த உலகில் யாருக்கும் கிடையாது. உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையான உணவை அவரவர் தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்றார்.