நவ்சாரி: குஜராத்தில் பிரதமர் மோடியின் படத்தை கிழித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ரூ. 99 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2017ம் ஆண்டு மாணவர்களின் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் படேல் கலந்து கொண்டார். போராட்டத்திற்கு இடையே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்குள் நுழைந்த எம்எல்ஏ அனந்த் படேல், அங்கிருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார்.
அதையடுத்து பல்கலைக்கழகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜலால்பூர் போலீசார் எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு நவ்சாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா ரூ.99 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், அவர்கள் ஏழு நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.