புதுடெல்லி: ராகுல் காந்தியின் வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் பெயர் குறித்த சர்ச்சையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறையின் இணைசெயலாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்துக்கு மரியாதை செலுத்துவது எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் மூலதனம். இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தியின் வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பது தொடர்பாக பகிரப்பட்ட உறுதிப்பாடு குறித்து இந்திய அரசுடன் நாங்கள் பேசி வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா கண்டனம் அமெரிக்க வௌியுறவுத்துறையின் இணைசெயலாளர் வேதாந்த் படேல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நீதிமன்ற தீர்ப்புக்கு மேலானதாக எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.