புதுடெல்லி: மோடி பெயர் குறித்த அவதூறு தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இன்று காலையில் ராகுல் காந்தி மீது பாஜக புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. அதில், முன்பு தான் சொன்ன கருத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட காங்கிரஸ் தலைவர் இப்போதுதான் ஒரு கோழை இல்லை என்பது போல நடிப்பதாக கூறியிருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதால் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. முன்பு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அவர் இப்போது தான் ஒரு கோழை இல்லை என்பதாக காட்டிக்கொள்கிறார். ஒரு தனிமனிதனை அவமானப்படுத்தியதற்காக இல்லாமல், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்ததற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
பிரதமர் மோடியை அவமதிப்பதாக நினைத்து, ராகுல் காந்தி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி குடும்பம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை அவமரியாதையாக பேசுவது இது முதல் முறையில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பக்குவம் ராகுல் காந்திக்கு இல்லாதது காந்தி குடும்பத்தின் மற்றொரு அரசியல் ஆணவத்தினைக் காட்டுகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி “காவலாளி ஒரு திருடன்” (செளஹிதார் சோர் ஹை) என்று கூறியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார்.