புதுடெல்லி: துருப்புகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக இந்த ஆண்டு லே செல்லும் 3 வழித்தடங்களிலும் விரைந்து பனி அகற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வழியாகவும் இமாச்சல பிரதேசத் தின் மணாலி வழியாகவும் லே செல்லும் சாலைகள் லடாக்கின் உயிர்நாடியாக உள்ளன. இச்சாலைகள் குளிர் காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் 439 கி.மீ. நீள ஸ்ரீநகர் வழித்தடம் இந்த ஆண்டு 68 நாட்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சாலை இந்தாண்டு ஜன. 6 வரை திறக்கப்பட்டிருந்தது.
இதுபோல் மணாலியில் இருந்து அடல் குகைப்பாதை வழியாக லே செல்லும் 472 கி.மீ. சாலை 138 நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை திறக்கப்பட் டது. வழக்கமாக இந்த சாலை மே அல்லது ஜூன் மாதம் திறக்கப் படும். இந்த சாலை விரைவாக திறக்கப்பட்டதற்கு அடல் சுரங்கப் பாதை முக்கிய காரணம் ஆகும்.
இதையடுத்து 16,561 அடி உயரத்தில் உள்ள ஷின்கு கணவாய் வழியாக செல்லும் நிம்மு – படாம்- தர்ச்சா சாலை 55 நாட்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டது. லடாக் செல்வதற்கான 3-வது வழித்தடமாக அமைக்கப்படும் இந்த சாலையில் தார் போடும் பணி இன்னும் முடிவடையவில்லை.
இந்த சாலைகளில் போக்கு வரத்தை முன்கூட்டியே தொடங்கிய தன் மூலம் இப்பிராந்தியத்தில் துருப்புகள் நடமாட்டம் எளிதாகி உள்ளது. படைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு பதில் குறைந்த செலவில் லாரிகள் மூலம் கொண்டு செல்ல முடியும். பொது மக்களும் குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும்.
கடினமான கணவாய்கள் விரைவில் திறக்கப்பட்டுள்ளது எல்லை சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (பிஆர்ஓ) பனி அகற்றும் திறனை நிரூபித்துள்ளது.
லடாக்கிற்கு அனைத்து பருவ காலத்திலும் போக்குவரத்தை உறுதி செய்ய சோஜி கணவாய் மற்றும் ஷின்கு கணவாயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்திய – சீன எல்லையில் 875 கி.மீ. நீளத்துக்கு மேலும் 37 சாலைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.ரூ.13,000 கோடி செலவிலான இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது லடாக், இமாச்சலபிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசத்தில் 1,435 கி.மீ. நீளத்துக்கு 2 கட்டங்களாக இந்திய – சீன எல்லை சாலைப் பணிகள் ரூ.1,600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.