புனே: ‛‛வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சியை அடைவது உள்ளிட்ட, பொதுவான குறிக்கோள்களில், இந்தியாவும் – ஆப்ரிக்காவும், ஒன்றுபட்டுள்ளன,” என, பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் பேசினார்.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில், இந்தியா – ஆப்ரிக்க நாடுகளின், இரண்டாவது ராணுவ கூட்டுப் பயிற்சியை ஒட்டி, இரு நாட்டு ராணுவ தலைவர்கள் மாநாடு நடந்தது.
இதில், பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஆப்பிரிக்க கூட்டாளி நாடுகளுக்கு அவர்களின் பாதுகாப்பு தேவைகளை உள்நாட்டில் பூர்த்தி செய்ய அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன், பாதுகாப்பு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது
வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சியை அடைவது, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில், இந்தியாவும் – ஆப்ரிக்காவும் ஒன்றாக செயல்படுகின்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான, கூட்டு பயிற்சிகள், ஆயுதப்படைகள் ஒருவருக்கொருவர் புதிய தகவல்களை கற்றுக்கொள்ளவும், ராணுவத்தின் இயங்கும் திறனை மேம்படுத்தவும், சிறந்த வாய்ப்பாக அமையும்.
கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், அமைதி காத்தல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சைபர் போர் மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் போன்ற, புதிய தளங்களை உள்ளடக்கியதாக, இப்பயிற்சி இருக்கும்.
ஆப்ரிக்க நாடுகளின், ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதிலும், 21 ஆம் நுாற்றாண்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தேவையான, திறன்களை அவர்களுக்கு வழங்குவதிலும், நம் நாடு முன்னிலையில் உள்ளது.
ஒரு நாடு, அதன் பாதுகாப்பை உறுதிசெய்யும்போது தான், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான, முழு திறனையும், அடைய முடியும்.
எனவே, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்புக்காகவும், ஆப்ரிக்க நாடுகளுடன், தொடர்ந்து பணியாற்றுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் 31 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பிற சிவில் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்