மின் வாரிய சேவைகளுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை, சேவை நிராகரிக்கப்படும்போது, திருப்பித் தருவதற்கு மாதக்கணக்கில் தாமதமாகிறது என, புகார் எழுந்துள்ளது.
புதிய மின் இணைப்பு, தற்காலிக இணைப்பு, இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு, வாரிய இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும்.
சரியான ஆவணம் பதிவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில், செலுத்திய தொகையை பெற, விண்ணப்பதாரர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு, உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, விண்ணப்ப நகல், கோரிக்கை கடிதம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பின், இணையம் வழியாக செலுத்தப்பட்ட கட்டணம், காசோலையாக வழங்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.
இதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், இணையம் வழியாகவே அனைத்து நடவடிக்கைகளும் முடியும்படி, செப்டம்பர் 2022 முதல் வசதி செய்யப்பட்டது.
அதன்படி, விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட விபரம், விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., தகவலாக செல்லும்.
சம்பந்தப்பட்ட நபர், வாரிய இணையதளத்தில் சென்று, மொபைல் எண், இ-மெயில் முகவரியை குறிப்பிட்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும். அந்த விபரங்களை மின் வாரியம் சரிபார்த்த பின், செலுத்திய தொகையை, ஒரு வாரத்துக்குள் விண்ணப்பதாரரின் கணக்கில் செலுத்தும்.
இருப்பினும், மின் வாரிய ஊழியர்களுக்கு புதிய நடைமுறை பற்றி விழிப்புணர்வு இல்லாததால், பழைய நடைமுறையையே பின்பற்றும்படி வலியுறுத்துகின்றனர். மேலும், இணையம் வழியாக கட்டணம் திருப்பிக் கேட்டு விண்ணப்பித்தாலும், பணம் கிடைக்க மாதக்கணக்கில் தாமதமாகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
புதிய நடைமுறை வந்து பல மாதங்களாகியும், பிரிவு அலுவலகங்களில் பணிபுரிவோர் கடிதம் கேட்கின்றனர்.
அதை கொடுத்து பல நாட்களாகியும் பணம் வராத நிலையில், மீண்டும் சென்று கேட்டால், இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கூறுகின்றனர். எனவே, கட்டணத்தை திரும்ப தருவதுடன், அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக, அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஊடகங்கள் எதற்கு?
மின் வாரியம், ‘பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப்’ ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளது. இணையதளத்தில் விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட பல சேவைகளை, வாரியம் செயல்படுத்தி உள்ளது. ஆனால், அவற்றை மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் பணியை சரிவர செய்வதில்லை.இதனால் தான் பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மின்சார சேவைகள் தொடர்பான விபரங்களை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விளக்கி கூறினாலே பலரும் பயன் பெறுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்