ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய ரயில்வே துறை அமைத்துள்ளது. இது வருகின்ற மே மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
இப்பாலமானது செனாப் ஆற்றின் குறுக்கே நதியின் நீர் மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரமும் 1.32 கிலோமீட்டர் நீளமும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் ஜம்மு காஷ்மீரின் உதன் பூர், ஸ்ரீநகர், பாரமுல்லாவை இணைப்பதுடன், விரைவில் நாட்டின் இதர பகுதிகளுடன் இவ் இரும்பு பாதையானது இணையும்.
இப் பாலமானது இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமானமானது 2004ல் தொடங்கப்பட்டு பல்வேறு இன்னல்கள், காட்டாறுகள், மற்றும் பல இயற்கை சீதோஷன நிலையையும் தாண்டி, இதன் இறுதிகட்ட பணியானது தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டமும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்தர இரும்பு காங்ரீட்டால் கட்டப்பட்ட இப்பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு வீசும் அதிகப்படியான காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பொருட்டு உறுதி தன்மையுடனும் காற்றின் வேகத்தை கண்டறியும் சென்சார்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றாப்போல் இங்கு செல்லும் ரயில்களின் வேகமானது கட்டுப்படுத்தப்படும். இந்தியாவின் ரயில்வே கட்டுமானத்தின் மைல் கல் இது என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் இரு கோடிகளான, ராமேஸ்வரத்திலும், ஜம்முகாஷ்மீரிலும் உலகின் தலைசிறந்த கட்டுமானத்தை ரயில்வேதுறை கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெருமைசேர்க்கும் விதமாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM