வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலூரில் நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர்.
வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்றும் வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பகல் நேரம் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வீடுகளில் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனால் வேலூரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.