புதுச்சேரி: 100 நாள் வேலை திட்டத்தில் தவறான தகவலை மத்திய அரசுக்கு அனுப்பிய அதிகாரியால் புதுச்சேரியில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் புதுச்சேரியில் அதிகாரிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளதுடன் அதிக நிதியை வாங்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். மத்திய அரசுக்கு தவறான தகவலை அனுப்பியதால்தான் வேலைநாட்கள் குறைக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் செல்வம் விளக்கம் தந்தார். வேலை செய்யாத அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதுடன், அதிக நாட்கள் வேலை செய்யவுள்ளதாக அமைச்சர் சாய்சரவணக்குமார் விளக்கம் தந்தார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பை எதிர்க்கட்சித்தலைவர் சிவா இன்று கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் புதுச்சேரியில் மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 14 நாட்கள் மட்டுமே வேலை தரப்படுகிறது. ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியாக திட்டத்தை தயாரித்து அனுப்புவதில்லை.
புதுச்சேரியில் 200 கோடி ரூபாய் புழக்கத்தில் வரவேண்டிய இத்திட்டம் அதிகாரிகளால் சரியாக செயல்படுத்தப்படவில்லை. 75 ஆயிரம் குடும்பம் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 75 லட்சம் நாட்கள் வேலை தந்திருக்கவேண்டும். அடிப்படை பணிகள் செய்திருக்க முடியும். பணப் புழக்கம் வந்திருக்கும். கடந்த ஆண்டு ரூ.8 கோடியும், நடப்பாண்டு ரூ.12 கோடியும் வாங்கி மத்திய அரசின் திட்டத்தை பாழ்படுத்தியுள்ளனர். தலைமைச் செயலர், செயலர் ஆகியோர் அலட்சிபோக்குதான் இதற்குக் காரணம். இத்திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 ஆயிரம் சென்றிருக்க வேண்டும். 75 லட்சம் நாட்களில் 8 லட்சம் நாட்கள் மட்டுமே வேலை தந்துள்ளனர்.
எல்லா மாநிலத்திலும் அங்கன்வாடி கட்டுதல், சாலை போடுதல், கழிவறை கட்டுதல் ஆகியவை செய்கிறார்கள். எந்த வேலையும் புதுச்சேரியில் செய்யவில்லை. திட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வேலை செய்ய தயாராக இருந்தாலும், அதிகாரிகளால் அதிக நிதியை வாங்க முடியவில்லை. மத்திய அரசு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தனர். அவர்களும் 30 சதவீதம் குறைந்துள்ளனர். 100 நாள் வேலையை எடுத்துவிடப் போகிறீர்களோ என்ற அச்சமும் உள்ளது. மத்திய அரசு பணத்தை பல வழிகளில் கொண்டு வரவேண்டும். மாநில வருவாயை மட்டுமே வைத்து செய்ய முடியாது” என்றார்.
அதையடுத்து அமைச்சர் சாய் சரவணக்குமார் கூறுகையில், “பிப்ரவரி இறுதிக்குள் மத்திய அரசு வழிகாட்டுதல்படி திட்டம் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரியில் மத்திய மத்திய அரசிடம் திட்டம் சமர்பிக்கப்பட்டது. 8 லட்சம் வேலை நாட்களில் 7.96 லட்சம் நாட்கள் பணி நடந்தது. சராசரி 19 நாட்கள். முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து பேசியுள்ளனர். வேலை செய்யாத அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். தகுதியானோர் நியமித்துள்ளோம். வரும் ஆண்டில் அதிக நாட்கள் வேலை செய்வோம்” என்றார்.
பேரவைத் தலைவர் செல்வம், “புதுச்சேரியில் 108 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. ஆனால், 10 கிராம பஞ்சாயத்துக்கள் மட்டுமே உள்ளது என தவறான தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியதால்தான் வேலை நாட்கள் குறைக்கப்பட்டது. அந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு நல்ல அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பான முறையில் இம்முறை செய்ய உள்ளனர்” என்றார்.