லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அத்திக் அகமது (60). இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உ.பி. முழுவதும் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அத்திக் அகமது ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் ரூ.11,684 கோடிக்கு சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தையும் உ.பி. அரசு முடக்கியுள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டு முதல் அலகாபாத் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும் கடந்த 2004 முதல் 2009 வரை புல்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆகவும் அத்திக் அகமது பதவி வகித்துள்ளார். சமாஜ்வாதி, அப்னா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அவர் இருந்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யில் உமேஷ் பால் கடந்த 2007-ம் ஆண்டு கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் பிரயாக் ராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக குஜராத்தின் சபர்மதி சிறையில் இருந்து அத்திக் அகமது நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உ.பி. பிரயாக்ராஜ் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையின் சிறப்பு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அவரை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபர்மதி சிறையில் இருந்து அத்திக் அகமது நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அத்திக், ‘‘என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல உ.பி. போலீஸார் திட்டமிட்டுள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார். வடஇந்திய செய்தி சேனல்களில் அத்திக் அகமது குறித்த செய்தி பிரதான இடம் பிடித்திருக்கிறது. குஜராத்தில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டது தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.