மதுரை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் நீக்கத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆவினில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து மதுரை, தேனி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 பேர் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எம்.தண்டபாணி நேற்று விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பணி நியமன தேர்வு அனுமதி பெறாத கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் சேதமானதால் தற்போது இல்லை என்கின்றனர். பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த ஆணையர் தான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அனுமதியளித்தவரே, விசாரணையை நடத்தி, ரத்தும் செய்துள்ளார். தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கதியில் பணி நியமனங்கள் நடந்துள்ளன. இந்த நியமனங்களில் ஆணையருடன், பொதுமேலாளர்களுக்கும் பங்கு உள்ளது. டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போல ஒரே குடையின் கீழ் தான் நியமனங்கள் நடக்க வேண்டும்.
எனவே, இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பக பதிவு மூப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆவின் ஆணையர் மற்றும் பொதுமேலாளர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை கால்நடைத்துறை முதன்மை செயலர் எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு வாரியத்தை உருவாக்கிடத் தேவையான சட்டத்திருத்தங்களை 3 மாதத்தில் மேற்கொள்ள வேண்டும். அதுவரை கூட்டுறவு சங்கங்களில் எந்தவித பணி நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது/. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.