திம்பு: இந்தியாவுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமித்து உள்ளது என்று பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் தெரிவித்து உள்ளார். இந்தியா மற்றும் பூடானுக்கு சொந்தமான எல்லைப்பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இதை இந்திய படைகள் தடுத்து விரட்டியடித்து வருகின்றன. இந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் சீனா படைகள் மோதிய டோக்லாம் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாக பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: டோக்லாமில் இந்திய மற்றும் சீன வீரர்கள் நேருக்கு நேர் மோதி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தற்போது அந்த பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதுபற்றி 3 நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பெரிய அல்லது சிறிய நாடு என்று எதுவும் இல்லை. மூன்று சமமான நாடுகள் உள்ளன. டோக்லாம் பகுதியில் ஒவ்வொரு நாடுகளும் சரியான பகுதியை கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மற்ற இரு நாடுகளும் தயாரானவுடன் இதுபற்றி பேசலாம். ஏனெனில் மூன்று நாடுகளின் பொதுப்பரப்பு படாங் லா பகுதியில் உள்ளது. சீன எல்லையான சும்பி பள்ளத்தாக்கு படாங் லாவின் வடக்கே அமைந்துள்ளது. இது பூட்டானுக்கு தெற்கிலும், கிழக்கிலும் உள்ளது. இந்தியாவுக்கு மேற்கு பகுதியில் அதாவது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
அந்த முச்சந்தியை படாங் லாவிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள கிப்மோச்சி என்ற சிகரத்திற்கு மாற்ற சீனா விரும்புகிறது. அது நடந்தால், முழு டோக்லாம் பீடபூமியும் சட்டப்பூர்வமாக சீனாவின் ஒரு பகுதியாக மாறும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே 2017ம் ஆண்டு டோக்லாமில் இருந்து பின்வாங்கிய சீன வீரர்கள் அங்கு அமோ சூ நதி பகுதியில் உள்ள பூட்டான் பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர் என்ற குற்றச்சாட்டையும் பூட்டான் தரப்பினர் வைத்துள்ளனர்.