அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின.
பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான பிரவேசத்தை அதிகரித்துக்கொள்ளதுடன் தற்போது காணப்படும் சுங்க வரி அல்லாத தடைகளை குறைத்துகொள்வதே இலங்கை தரப்பு பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
மேற்படி 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக தாய்லாந்து வர்த்தக கலந்துரையாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவுரமன் சுப்தாவீதும் (Auramon Supathaweethum) தலைமையில் 35 அதிகாரிகள் உள்ளடங்களான தாய்லாந்து தூதுக் குழு மார்ச் 26 ஆம் திகதி இந்நாட்டை வந்தடைந்தது.
அதேபோல், இருநாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்ட கால சமய மற்றும் கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் தாய்லாந்து குழுவினரால் கங்காராம விகாரைக்கு 500 அன்னதானப் பாத்திரங்கள் நன்கொடையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதம மத்தியஸ்தர் கே.ஜே. வீரசிங்க தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பொருளாதார, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, தொழில் அமைச்சு, பொருளாதார மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், வணிகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளை கொண்ட தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான குழுவினர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றுடன் (29) நிறைவடைய உள்ளன.