ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த செரையாம்பாளையம், பவானி ஆற்றில் கை, கால், தலை இல்லாத முண்டமாக ஒரு ஆணின் சடலம் மிதப்பதாக கவுந்தப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார், கை, கால்கள், தலை இல்லாமல் நிர்வாண நிலையில் காெடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த உடலை கைப்பற்றி விசாரணையை தாெடங்கினர். கொலை செய்யப்பட்ட உடலின் மற்ற பாகங்கள் கிடைக்கிறதா என்பதையும் போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். செரையாம்பாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.க்கு அப்பால் குட்டிபாளையம் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கைகள், கால்கள், தலை மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் அதையும் கைப்பற்றி ஏற்கெனவே கிடைத்த முண்டத்துடன் பொருத்தி பார்த்தனர்.
கிட்டத்தட்ட அந்த உடலுடன் அந்த உடல்பாகங்கள் பொருந்தி போனது. இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அந்த சடலத்தை போலீஸார் அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் இறந்து போன நபர் யார், எந்தப் பகுதியை சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக காெடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து கவுந்தப்பாடி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸாரிடம் பேசினோம். “கொலை செய்யப்பட்ட அந்த ஆண் நபருக்கு 30 முதல் 35 வயது இருக்கும். உயிரிழந்து 3 நாள்கள் ஆன நிலையில் பவானி ஆற்றில் வீசப்பட்டு சுமார் 10 மணி நேரம் தான் இருக்கும் என்று தெரிகிறது. நீண்டநேரம் ஆகியிருந்தால் மீன்கள் கடித்து, உடல் சிதைந்து போய் இருக்கும். அதுபோல எதுவும் நடக்கவில்லை. உடல், கை, கால்கள், தலை போன்றவற்றை வெட்ட கசாப்பு கடைக்காரர்கள் பயன்படுத்தும் கத்தியை பயன்படுத்தியிருக்கக் கூடும்.
இவ்வளவு கொடூரமாக கொலை செய்திருப்பதை பார்க்கும்போது, திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விவகாரமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும், இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டம் என தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் தேடப்படும் நபர்களின் புகைப்படங்களையும், அதில் கூறப்படும் தழும்பு, மச்சங்கள் போன்ற அடையாளங்களுடன் உயிரிழந்தவரின் உடலுடன் ஒப்பிட்டு பார்த்த போதும் எந்த தடயமும் சிக்கவில்லை. சடலம் கிடைத்த பகுதியிலும், அதன் சுற்றுப்பகுதியிலும், பவானி ஆற்றுப் பாலம் உள்ள பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த 1 வாரமாக பதிவான காட்சிகளை பெற்று அதை ஆய்வு செய்து வருகிறோம். வேறு இடத்தில் கொலை செய்து அதை மூட்டையாகக் கட்டி எடுத்து வந்து இங்குள்ள பவானி ஆற்றில் வீசிச் சென்றிருக்கக் கூடும் என்றே தெரிகிறது. இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றனர் விரிவாக.
இந்த கொலை சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் கிளப்பியுள்ளது.