பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 95.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும், இம்மருத்துவமனை செப்டம்பர் மாதம் துவங்கப்படும் என்றும் கூறினார்.
தூத்துக்குடியில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவின வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 138.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும், ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவின வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 177.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக கூறினார்.
விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும், பெரும் காயமுற்று அவதிப்படும் தொழிலாளர்களுக்கு விரைவில் குணமடையும் வகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் விதத்திலும், நவீன தொழில்நுட்ப அடிப்படையிலும், அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலப்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
newstm.in