கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலத்தில் புதிதாக அமைய உள்ள ராமர் கோயிலின் மாதிரி வீடியோவை பாஜக அமைச்சர் வெளியிட்டார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதேபோல் ஏப்ரல் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் லிஸ்ட்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கடந்த 25ம் தேதி அறிவித்தது. இந்த பட்டியலில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு 124 பெயர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கனகபுரா தொகுதியில் டி.கே.சிவகுமார் மீண்டும் போட்டியிடும் நிலையில், சித்தராமையா தற்போது அவரது மகன் யதீந்திர சித்தராமையா பிரதிநிதித்துவப்படுத்தும் மைசூருவின் வருணா தொகுதியைப் பெற்றுள்ளார்.
பாஜகவின் வியூகம்
தென்மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், இந்த தேர்தலில் பெரும்பான்மையை வெற்றியை பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித ஒடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையை இரண்டும் சமூகங்களும் எதிர்த்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து கணிப்பு சொல்வது என்ன.?
கர்நாடகாவில் கடந்த முறை போலவே தொங்கு சட்டசபை அமையும் என்று தான் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113ல் வெற்றி பெறும் கட்சியே தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். ‘கர்நாடகா டிவி’ நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
லைக்ஸை அள்ளும் காங்கிரஸ் வாக்குறுதிகள்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவிற்கு கைகொடுக்குமா ராமர் கோயில்.?
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் ராமதேவரா மலையில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் அமையும் மாதிரி வரைபடத்தை அமைச்சர் அஸ்வத் நாராயண் நேற்று 3டி வீடியோவாக வெளியிட்டார்.
கர்நாடக தேர்தல் 2023: முஸ்லீம் இடஒதுக்கீடு ஜீரோ… சுர்ருனு எகிறிய பஞ்சமாசாலி லிங்காயத்துகள்!
2 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் கோவிலின் வளாகம், மண்டபங்கள், கோபுரம், கோவில் மைய பகுதி கட்டடங்கள் பிரமாண்டமாக அமைய உள்ளது. இந்த ராமர் கோவில் தென் இந்தியாவின் ராமர்கோவில் என பக்தர்களால் அழைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்தார். இந்தசூழலில் உத்தரபிரதேசத்தை போல் கர்நாடகா தேர்தலிலும் ராமர் கோயில் அஸ்திவாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜகவின் கனவு பலிக்குமா என்பது வருகிற ஏப்ரல் 13ம் தேதி தெரியவரும்.